தரமற்ற தடுப்பூசி இறக்குமதி தொடர்பில் விசாரணை வேண்டும்: சஜித் வலியுறுத்து!
” தரமற்ற தடுப்பூசி பயன்படுத்தப்பட்டுள்ளதால் இருவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்.” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
இன்று (22) விசேட கூற்றொன்றை விடுத்தே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் சஜித் பிரேமதாச கூறியவை வருமாறு,
“குமட்டல், வாந்தி மற்றும் தலைச்சுற்று என்பனவற்றைக் குறைப்பதற்கும் தடுப்பதற்கும் கொடுக்கப்பட்ட தடுப்பூசிகளில் நச்சுத்தன்மை ஏற்பட்டதால் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஹபரகட மற்றும் மத்துகம பகுதிகளைச் சேர்ந்த இரு பெண்களே ஐ.டி.எச்.வைத்தியசாலையில் கடுமையாக சுகவீனமுற்று இறுதியில் இவ்வாறு உயிரிழந்தனர்.
கண்டி வைத்தியசாலையில் நடத்தப்பட்ட முதற்கட்ட நுண்ணுயிரியல் பரிசோதனையில் குறித்த தடுப்பூசிகளில் பக்டீரியாக்கள் இருப்பது தெரியவந்துள்ளது என அறியமுடிகின்றது.
இதனையடுத்து மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை, வைத்தியசாலை கட்டமைப்பிலிருந்து 2 லட்சத்து 70 ஆயிரம் இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசிகளை திரும்பப் பெற்றுள்ளது .
இந்தத் தகவலின் உண்மைத்தன்மையை சுகாதார அமைச்சரும் அரசாங்கமும் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
இந்த தடுப்பூசி கொள்வனவு அவரச கொள்வனவா ? இதன் தரம் பரிசோதிக்கப்பட்டதா? அவ்வாறு மேற்கொண்ட பரிசோதனைகளின் முடிவுகள் எத்தகையன என்பது தொடர்பில் எமக்கு தெளிவுபடுத்தல் அவசியம்.
நமது நாட்டில் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளின் தரத்தை பரிசோதிக்கும் வழிமுறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
மேற்படி தடுப்பூசிகளால் ஏற்பட்ட இரண்டு மரணங்கள் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்பட்டு, தரமற்ற தடுப்பூசி மாபியாவின் தொடர்ச்சியான செயல்பாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” –என்றார் எதிர்க்கட்சி தலைவர்.





