இலங்கையில் அதிகரித்துள்ள பணவீக்கம்; உணவு விலை மீண்டும் ஏற்றம்
பொருளாதார நெருக்கடிநிலையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் பணவீக்கம் கடந்த ஜூன் மாதம் 1.7 சதவீதம் அதிகரித்தது. அதற்கு முந்தைய மாதத்தில் அது 0.9 சதவீதம் ஏற்றம் கண்டது.இந்நிலையில், அந்நாட்டில் உணவு விலையும் மீண்டும் அதிகரித்து வருவதாக தரவுகள் காட்டுகின்றன.
10 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை அடைக்கும் திட்டத்தை மறுசீரமைப்பது தொடர்பாக கடன் வழங்கிய நாடுகளுடன் இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளது.IMF நிதியுதவியைப் பெற இது மிகவும் முக்கியம்.
இந்நிலையில், இலங்கையில் உணவு விலை மீண்டும் அதிகரித்துள்ளது. ஜூன் மாத நிலவரப்படி அது 1.04 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.இந்த விவரங்களை இலங்கையின் மக்கள் தொகை கணக்கெடுப்பு, புள்ளிவிவரத்துறை வெளியிட்டது.
வெளிநாடுகளிடமிருந்து பேரளவில் கடன் வாங்கி அதை அடைக்க முடியாமல் இலங்கை 2022ஆம் ஆண்டில் தத்தளித்தபோது, அந்நாட்டில் பணவீக்கம் ஏறத்தாழ 70 சதவீதம் அதிகரித்தது.இதற்கிடையே, இவ்வாண்டில் ஒட்டுமொத்த பணவீக்கத்தை 5 சதவீத்த்திற்கும் குறைவாக வைத்திருக்க முடியும் என்று இலங்கை மத்திய வங்கி ஜூன் மாதம் 29ஆம் திகதி நம்பிக்கை தெரிவித்தது.
இலங்கையில் இவ்வாண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது.அனைத்துலகப் பண நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மாற்ற தீவிரமாகச் செயல்படப்போவதாக எதிர்க்கட்சிகள் சூளுரைத்துள்ளன.
IMF நிதியம் தற்போது விதித்துள்ள நிபந்தனைகள் காரணமாக மிகக் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கட்டாயம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது.
மாற்றுத் திட்டங்கள் குறித்து இலங்கை அரசியல் கட்சிகள் முன்வைக்க இருக்கும் பரிந்துரைகளைச் செவிசாய்க்கத் தயாராக இருப்பதாக IMF தெரிவித்துள்ளது.ஆனால், தற்போதைய நிதியுதவித் திட்டத்தில் வகுக்கப்பட்ட வரையறைக்கு உட்பட்டு அவை இருக்க வேண்டும் என அது வலியுறுத்தியது.