ரங்கே பண்டாரவின் மகன் யசோத பண்டாரவுக்கு பிணை
புத்தளம் கருவலகஸ்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டாரவுக்கு புத்தளம் நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
இந்நிலையில் அவரது ஓட்டுநர் உரிமத்தை நீதிமன்றம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, சந்தேகநபரை 1000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு புத்தளம் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தை அடுத்து அவர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருவலகஸ்வெவ மீ-ஓயா 7ஆம் மைலுக்கு அருகில் ஆனையிறவு பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யசோத ரங்கே பண்டார ஓட்டிச் சென்ற கார் வீதியை விட்டு விலகி முச்சக்கர வண்டியுடன் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி பலத்த காயங்களுக்குள்ளாகி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.