மனோவின் யோசனைக்கு ராதா போர்க்கொடி: மலையகத்தைவிட்டு வெளியேற மறுப்பு!
“மலையகத் தமிழர்கள், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு சென்று குடியேறுவதற்கு தயாரில்லை. மலையகம்தான் எங்களின் தாயகம்.”
இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஸ்ணன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
மலையக மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் காணி வழங்கப்படாவிட்டால், அவர்களை வடக்கு, கிழக்கில் குடியேற்றுவதற்கு தயார் என தமிழரசுக் கட்சியின் செயலாளர் சுமந்திரன் அறிவித்திருந்தார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் பதிவொன்றை பகிர்ந்தே சுமந்திரன் மேற்படி அறிவிப்பை விடுத்திருந்தார்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று (18) உரையாற்றிய இராதாகிருஸ்ணன் எம்.பி., மலையகத் தமிழர்கள் வடக்கு, கிழக்குக்கு குடியேற வரப்போவதில்லை என அறிவித்தார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவராக பதவி வகிக்கும் மனோ கணேசன், மலையகத் தமிழர்கள் வடக்கு, கிழக்கில் குடியேறுவதை வரவேற்கின்றார்.
எனினும், அக்கூட்டணியின் பிரதித் தலைவராக உள்ள இராதாகிருஸ்ணன் எதிர்க்கின்றார். இது விடயத்தில் முற்போக்கு கூட்டணிக்குள்ளேயே ஒருமித்த நிலைப்பாடு இல்லை என்பதை இது வெளிப்படுத்துகின்றது.
அதேவேளை, மலையகத் தமிழர்களுக்கு மலையகத்திலேயே 7 பேர்ச்சஸ் காணி வழங்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தலையும் இராதாகிருஸ்ணன் சபையில் விடுத்தார்.





