அமெரிக்காவில் நீடிக்கும் முடக்கம் – ஊழியர்கள் வேலையிழக்க நேரிடும் அபாயம்
அமெரிக்காவில் அரசாங்க முடக்கம் தொடர்கின்ற நிலையில் 2 நாட்களுக்குள் மத்திய அரசாங்க ஊழியர்களின் வேலையிழப்பு தொடங்கலாம் என வெள்ளை மாளிகை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், முடக்க நிலை எவ்வளவு நாள் நீடிக்குமென தெரியாது என துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் செயற்பாடு முடங்கியதற்கு ஜனநாயகக் கட்சியினரும், குடியரசுக் கட்சியினரும் ஒருவரையொருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
மீண்டும் வாய்ப்புக் கிடைக்காத வகையில் பெரும்பாலோர் வேலையிலிருந்து நீக்கப்படலாம் என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசாங்கத்துக்கு நிதியளிக்கும் செலவின சட்டமூலத்தை செனட் சபை ஏற்றுக்கொள்ளவில்லை. அரசாங்கம் முடங்குவதற்கு அதுவே முக்கிய காரணமாகும்.
கடந்த 7 ஆண்டுகளில் முதன்முறை இப்படியோர் இக்கட்டான சூழல் ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க அரசாங்கத்தின் முக்கியமான செயல்பாடுகள் முடங்கிப் போயிருக்கின்றன.
மத்திய அரசாங்கத்தின் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் சம்பளமில்லா விடுப்பில் செல்ல நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பணி செய்யும் ஊழியர்கள் சம்பளம் இழக்க நேரிடலாம். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பளம் பெறுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.





