ஒடிசா ரயில் விபத்து : பிணவறையில் உயிருடன் இருந்த மகனை மீட்ட தந்தையின் பாசப் போராட்டம்!
மேற்கு வங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது. இதில் 280 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இதில் ஹவுராவில் கடை வைத்திருக்கும் பிஸ்வஜித் என்பரும் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டது. இதனை நம்ப மறுத்த அவருடைய தந்தையான ஹெலராம் மாலிக், சுமார் 230 கிமீ தூரம் பாலசோருக்குப் பயணித்து பிணவறையில் மயங்கிய நிலையில், இருந்த தனது மகனை மீட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரெயில் விபத்து செய்தியை அறிந்ததும் தனது மகனை தொலைப்பேசியில் அழைத்த அவர், தன் மகன் விபத்தில் காயமுற்றாலும் உயிருடன் இருப்பதை அறிந்துள்ளார்.
இதனையடுத்து ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றில் அன்று இரவே பாலசோருக்குப் புறப்பட்டுள்ளார். 230 கிமீ பயணித்து பஹானாகா உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த சவக்கிடங்கிற்கு சென்று தன் மகன் உயிருடன் இருப்பதை அறிந்துக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக பிஸ்வஜித் ஆம்புலன்சில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு சில ஊசிகள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
உடல்நிலையைக் கருத்தில் கொண்டுஅவரை மேல் சிகிச்சைக்காக கட்டாக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவரகள் பரிந்துரைத்தனர். ஆனால் ஹெலராம் மகனை டிஸ்சார்ஜ் செய்து கொல்கத்தாவில் சிகிச்சையைத் தொடர முடிவு செய்தார்.
கொல்கத்தாவிற்கு காரில் செல்லும் நேரம் முழுவதும் பிஸ்வஜித் சுயநினைவின்றியே இருந்தார். ஞாயிறு காலை 8.30 மணிக்கு எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட அவருக்கு கணுக்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
பிஸ்வஜித் சஸ்பெண்டட் அனிமேஷன் என்ற நிலையில் உள்ளார் என டாக்டர் சோம்நாத் தாஸ் கூறுகிறார். ஏதேனும் அதிர்ச்சியால் இந்த நிலை ஏற்படும் என்றும் அப்போது உயிரியல் செயல்பாடுகளின் தற்காலிக மந்தநிலையில் இருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.