பணி முடிந்து வீடு திரும்பிய அதிகாரியை தாக்கிய NPP அரசாங்கத்தின் எம்.பி!
சூரியகந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரி ஒருவர், தனது கடமையை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது, இரத்தினபுரி மாவட்ட தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார சுபசிங்க உள்ளிட்ட குழுவினரால் தாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு நடந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தின் போது காயமடைந்த காவல்துறை அதிகாரி தற்போது எம்பிலிப்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முறைப்பாட்டின்படி, சூரியகந்த காவல்துறையினரால் சமீபத்தில் நடத்தப்பட்ட கஞ்சா சோதனையில் குறித்த அதிகாரி பங்கேற்றுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் மனைவியின் தந்தைக்கு சொந்தமான ஒரு நிலத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார மற்றும் பலர் வாகனத்தில் வந்து, தன்னைத் தாக்கியதாகவும், தாக்குதலின் போது தன்னை அச்சுறுத்தியதாகவும் காயமடைந்த அதிகாரி கூறுகிறார்.
இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர் சுபசிங்கவும் அந்த அதிகாரி குறித்து காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





