மாணவர்களுக்கு மின்னஞ்சல் குறித்து குற்றப்புலனாய்வினர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
பாடசாலை மாணவர்கள் மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்கும் போது தமது சரியான வயதைக் குறிப்பிட வேண்டும், அத்துடன் தமது பெற்றோரின் தகவல்களை வழங்கக் கூடாது எனவும் பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவில் அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
ஒன்லைன் மூலமான கல்விச் செயற்பாடுகள் தற்போது அதிகமாக இருப்பதால் சிறுவர்களுக்கு கைத்தொலைபேசியைக் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே கைத்தொலைபேசிகளை வழங்கும் போது மின்னஞ்சல் கணக்குகளைத் திறக்கும் போது பெற்றோரின் தகவல்களை (வயது) பதிவு செய்வதால் சிறார்கள் எந்தவொரு வலைத்தளத்திற்கும் பிரவேசிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
அவ்வாறின்றி பிள்ளைகளின் வயது உள்பட பிற சரியான தகவல்களை வழங்கும் பட்சத்தில், பொருத்தமற்ற இணையத்தளங்களுக்கு சிறுவர்கள் உள்நுழைவதையும் இணையத்தின் செயல் திறனையும், இணைய அமைப்பானது தானாகவே கட்டுப்படுத்தும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தலைமையில் தேசிய நல்லிணக்கம் மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு கூடிய போது இது குறித்து கலந்துரையாடப்பட்டது.
மேலும் கைத்தொலைபேசிகள் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் (TRC) அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என அறிந்து கொள்ள வேண்டும். அப்படியென்றால், சட்டவிரோத அல்லது குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்படும் போது அதை விரைவாக சமாளிக்கும் திறன் இவ்வகையான கைபேசிகளுக்கு உள்ளது என அவர்கள் அறிவுறுத்தினர்.