சுவிஸில் தொலைபேசி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது
சுவிட்சர்லாந்தில் போலி தொலைபேசி மோசடிகள் அதிகரித்து வருவதாக பொலிசார் பொதுமக்களை எச்சரித்து வருகிறார்கள்.
ஆனாலும் ஏமாற்றுக்காரர்கள் புதிய புதிய யுக்திகளை கையாண்டு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். போலி தொலைபேசி மோசடிகள் குறித்த ஒரு சம்பவம் சென்ட்காலன் கன்டோனில் இடம்பெற்றுள்ளது.
சென்ட்காலன் கன்டோன் ரெப்ஸ்டீன் பகுதயில் இடம்பெற்ற இந்த மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பொலிசாரின் பிடியில் கையும் மெய்யுமாக சிக்கியுள்ளார்.
குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில், ரெப்ஸ்டீன் பகுதியில் வசிக்கும் 78 வயதுப் பெண்மணிக்கு திங்களன்று அழைப்பு ஒன்று வந்துள்ளது.
மீடியாமார்க்கிலிருந்து அவர் ஆர்டர் செய்த தொலைக்காட்சிக்கு பல ஆயிரம் பிராங்குகள் செலுத்த வேண்டும் எனவும் இந்த பணத்தை வங்கியில் இருந்து எடுக்கும்படியும் கூறப்பட்டது.
78 வயதான அவர் பணத்தைப் பெற்று கொடுத்த பிறகு, அது கள்ளப் பணம் என்றும், அதை சென்ட்காலன் கன்டோனல் காவல்துறையைச் சேர்ந்த ஒரு பொலிஸ் அதிகாரியால் சோதனை செய்யப்படவேண்டும் எனவும் குறித்த நபரால் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கன்டோனல் பொலிசார் பணம் கைமாறுவது குறித்து அறிந்து பிற்பகல் 2 மணிக்கு பின்னர் பணம் வசூலிக்க போலியாக வயோதிபப்பெண்ணின் வீட்டிற்கு வந்த நபரை மடக்கிப்பிடித்துள்ளனர்.
அவர் சுவிட்சர்லாந்தில் வசிக்காத 27 வயதான பிரெஞ்சுக்காரர் என்பது தெரியவந்துள்ளது. 78 வயது முதியவரின் வீட்டில் நிறுத்தப்பட்டு குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்ட்காலன் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
சுவிட்சர்லாந்தில் போலி பொலிஸ் அதிகாரிகள் அல்லது பாதுகாப்பு அதிகாரிகள் போன்று மோசடி செய்யும் முயற்சிகள் மீண்டும் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.