சிங்கப்பூரில் ஆபத்தான முறையில் பணியாற்றும் வெளிநாட்டு பெண்களுக்காக முக்கிய நடவடிக்கை
சிங்கப்பூரில் ஜன்னல்களின் வெளிப்புறத்தை ஆபத்தான முறையில் சுத்தம் செய்யும் பணியில் வெளிநாட்டுப் பணிப்பெண்கள் அமர்த்தப்படுகின்றனர்.
இந்த நிலையில் அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக, மனிதவள அமைச்சு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 15 முதலாளிகள், பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதே காலகட்டத்தில், 6 பணிப்பெண்கள் உயரத்தில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவங்களும் பதிவாகி உள்ளது. இது முதலாளிகளின் கவனக்குறைவே காரணம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அந்த வகையில், பணிப்பெண்கள் ஜன்னல்களை சுத்தம் செய்யும் போது, பாதுகாப்பு கருதி ஜன்னல் கம்பிகள் பொருத்தப்பட்டு, அவை பூட்டப்பட்டிருக்க வேண்டும்.
இந்த விதிமுறைகள் பின்பற்றப்படாவிட்டால், பணிப்பெண்கள் ஜன்னலின் வெளிப்புறத்தை சுத்தம் செய்ய அனுமதிக்கப்படக்கூடாது.
மேலும், சுத்தம் செய்யும் பொழுது யாரேனும் ஒருவர் அவர்களை கண்காணிக்க வேண்டியது கட்டாயம்.
இந்த விதிமுறைகளை மீறும் முதலாளிகளுக்கு அதிகபட்சமாக 10,000 சிங்கப்பூர் டொலர் அபராதம் அல்லது ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
பணிப்பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அமைச்சர் டான் உறுதியளித்துள்ளார்.





