பிரான்ஸின் லூவ்ரே (Louvre) அருங்காட்சியக கொள்ளை – இருவர் கைது!
பாரிஸில் உள்ள லூவ்ரே (Louvre) அருங்காட்சியகத்தில் இருந்து விலைமதிப்பற்ற நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
லீ பாரிசியன் (Le Parisien) செய்தித்தாள் வெளியிட்டுள்ள தகவலின்படி, பாரிஸின் புறநகர்ப் பகுதியான சீன்-செயிண்ட்-டெனிஸைச் (Seine-Saint-Denis) சேர்ந்த ஒருவரும் மற்றயவர் சார்லஸ் டி கோல் (Charles de Gaulle) விமான நிலையத்தில் வைத்தும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரான்ஸில் அமைந்துள்ள லூவர் (Louvre) அருக்காட்சியகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருடர்கள் 102 மில்லியன் டொலர் மதிப்புள்ள 08 நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றனர்.
கட்டுமானத் தொழிலாளர்கள் போல் வேடமிட்டிருந்த திருடர்கள் இரண்டாவது மாடியை அடைந்ததும், வெறும் 07 நிமிடங்கள் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியிருந்தனர்.
சரியாக காலை 09.38 இற்கு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதற்காக அவர்கள் இரண்டு மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தியதாகவும் காவல்துறை குறிப்பிட்டிருந்தது.





