மீண்டும் பதவியேற்றதை அடுத்து புதிய பிரெஞ்சு அமைச்சரவையை நியமித்துள்ள லெகோர்னு

பிரான்ஸின் புதிய பிரதமராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள செபாஸ்டியன் லெகோர்னு (Sebastien Lecornu) நேற்று தனது புதிய அமைச்சரவையை நியமித்துள்ளார்.
புதிய அமைச்சரவையில் முந்தைய அரசாங்கங்களில் பணியாற்றிய பல உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த புதிய அணி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
புதிய நியமனங்களில், முன்னாள் தொழிலாளர் அமைச்சர் கேத்தரின் வௌட்ரின் (Catherine Vautrin) என்ற புதிய பாதுகாப்பு அமைச்சர் இடம்பெற்றுள்ளார்.
அவர் உக்ரைனுக்கான இராணுவ ஆதரவை மேற்பார்வையிடவும், ரஷ்யாவால் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்யவும் உதவுவார் எனக் கூறப்படுகிறது.
அத்துடன் உள்துறை அமைச்சராக 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கிற்கான பாதுகாப்பை மேற்பார்வையிட்ட பாரிஸ் காவல்துறைத் தலைவர் லாரன்ட் நுனேஸ் (Laurent Nunez) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் நிதியமைச்சராக ரோலண்ட் லெஸ்குரே (Roland Lescure) நியமிக்கப்பட்டுள்ளார். பிரான்ஸ் வரவு செலவு திட்டங்கள் தொடர்பில் பாரிய பிரச்சினைகளை சந்தித்து வருகின்ற நிலையில் இவரது நியமனம் முக்கியத்துவம் மிக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இவர்களைத் தவிர தொழிலாளர் அமைச்சராக ஜீன்-பியர் ஃபரான்டோ(Jean-Pierre Faranto), சுற்றுச்சூழல் மாற்ற அமைச்சராக மோனிக் பார்பட் (Monique Barbet), தேசிய கல்வி அமைச்சராக எட்வார்ட் ஜெஃப்ரே(Edward Jeffrey) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் சமகாலத்தில் கடுமையான நிதி பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் வரவு செலவு திட்டத்தில் சலுகைகளை குறைக்கும் யோசனைகளை பிரதமர் முன்வைத்திருந்தார். இதற்கு மக்கள் மத்தியிலும், எதிர்கட்சி அரசாங்கத்தரப்பில் இருந்தும் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து செபாஸ்டியன் லெகோர்னு (Sebastien Lecornu) பதவி விலகுவதாக அறிவித்தார். பின் ஜனாதிபதி மக்ரோனுடன் (Macron) நடத்தப்பட்ட நீண்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அவர் மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
இவ்வருடத்தின் இறுதிக்குள் புதிய வரவு செலவு திட்டத்தை அரசாங்கம் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சூழ்நிலையில் இந்த புதிய அமைச்சரவை பதவியேற்பது குறிப்பிடத்தக்கது.