அடுத்த வருட தேர்தலில் மீண்டும் பிரதமராக போட்டியிடும் இஸ்ரேலின் நெதன்யாகு
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) அடுத்த வருட தேர்தலில் போட்டியிடுவதாகவும் அதில் கண்டிப்பாக வெற்றி பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நேர்காணலில் பேசிய நெதன்யாகுவிடம், மீண்டும் ஒரு பதவிக்காலத்தை எதிர்பார்க்க விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்டதற்கு எவ்வித தயக்கமும் இன்றி ஆம் என்று பதிலளித்துள்ளார்.
இஸ்ரேலின் முக்கிய வலதுசாரிக் கட்சியான லிக்குட்டின் (Likud) தலைவரான நெதன்யாகு, இஸ்ரேலின் மிக நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றிய சாதனையைப் படைத்துள்ளார்.
முதன் முதலில் 1996ம் ஆண்டு பதவியேற்ற நெதன்யாகு 2025 வரை 7 முறை தேர்தலில் போட்டியிட்டு 18 வருடங்கள் பதவி வகித்துள்ளார்.
இறுதியாக 2022ம் ஆண்டு நடந்த தேர்தலில், நெதன்யாகுவின் வலதுசாரி லிகுட் கட்சி 32 இடங்களை வென்றது, மேலும் 120 இடங்களைக் கொண்ட இஸ்ரேலிய பாராளுமன்றத்தின் 64 உறுப்பினர்களால் அவர் அரசாங்கத்தை அமைக்க தகுதியுடையவராகப் பரிந்துரைக்கப்பட்டார்.
இந்நிலையில், காசாவில் ஹமாஸ் அமைப்புடன் போர் தொடங்கியதிலிருந்து, நெதன்யாகு போரை கையாண்ட விதம் மற்றும் பணயக்கைதிகளின் குடும்பத்தினரிடமிருந்து எழுந்த விமர்சனங்களுக்கு மத்தியில் மீண்டும் அவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.





