மியான்மருக்கு உதவ “ஆபரேஷன் பிரம்மா” திட்டத்தை தொடங்கிய இந்தியா

மியான்மரில் பெரிய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் அழிவிலிருந்து தத்தளித்து வரும் நிலையில், இந்தியா 15 டன் நிவாரணப் பொருட்களை வழங்கியதுடன், அவசரகாலப் பணியான ‘ஆபரேஷன் பிரம்மா’வின் கீழ் மீட்புக் குழுக்களுடன் வான் மற்றும் கடல் வழியாக கூடுதல் பொருட்களையும் அனுப்பியது.
அண்டை நாட்டிற்கு உதவ புது தில்லியின் உறுதியை பிரதிபலிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி மியான்மரின் மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லைங்குடன் பேசினார், மேலும் அந்த நாட்டு மக்களுடன் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது என்றார்.
“பேரழிவு தரும் நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஒரு நெருங்கிய நண்பராகவும், அண்டை நாடாகவும், இந்த கடினமான நேரத்தில் மியான்மர் மக்களுடன் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது,” என்று பிரதமர் ‘X’ தளத்தில் குறிப்பிட்டார்.
இந்திய கடற்படைக் கப்பல்களான ஐஎன்எஸ் சத்புரா மற்றும் ஐஎன்எஸ் சாவித்ரி 40 டன் மனிதாபிமான உதவிகளை ஏற்றிக்கொண்டு யாங்கோன் துறைமுகத்திற்குச் சென்றுள்ளதாக வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்தார்.