இந்தியா -சிக்கிமில் சிக்கித் தவிக்கும் 1200 சுற்றுலாப் பயணிகள்… விமானம் மூலம் மீட்க ஏற்பாடு
இடைவிடாத கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகள் காரணமாக சிக்கிமில் உள்ள மங்கன் மாவட்டத்தில் 15 வெளிநாட்டவர்கள் உட்பட 1200-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிக்கின்றனர்.
தொடர்ந்து பெய்யும் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மாங்கன் மாவட்டம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மின்சாரம், தகவல் தொடர்பு உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது. இதனிடையே அங்கு நிலச்சரிவுகளில் சிக்கி 6 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் தலைமையில் நிலச்சரிவுக்குப் பிந்தைய நிலைமையை மதிப்பிடுவதற்கான கூட்டம் மின்டோகாங்கில் நடைபெற்றது. சிக்கிம் சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் முதன்மைச் செயலாளர் சி.எஸ்.ராவ், சுற்றுலாப் பயணிகளை விமானம் மூலம் மீட்கும் நடவடிக்கைகளை தலைமைச் செயலர் அலுவலகம் தொடங்கியுள்ளது என்று தெரிவித்தார்.
சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதியளித்த ராவ், தொடரும் பேரிடர்களுக்கு மத்தியில் உள்ளூர் மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டார்.