இராணுவத்தை களமிறக்காவிட்டால் நாடு தீக்கிரையாகியிருக்கும் – விஜயதாஸ ராஜபக்ஷ
மே 09 தின சம்பவத்தை தொடர்ந்து இராணுவத்தை களமிறக்காமல் இருந்திருந்தால் மே 10 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் உட்பட நூறு அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், பொதுஜன பெரமுனவின் முறையற்ற செயற்பாட்டினால் மே 09 சம்பவம் தோற்றம் பெற்று பாரிய விளைவுகளை ஏற்படுத்தியது என எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டினார்கள்.
எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மே 09 பயங்கரவாத சம்பவம் இடம்பெற்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என ஆளும் தரப்பினர் அதிருப்தி தெரிவித்தார்கள்.
மே 09 காலி முகத்திடல் சம்பவத்தை தொடர்ந்து அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்களை அழிக்க ஒரு தரப்பினர் தீர்மானித்து, அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலை தயாரித்துள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றது.
இதனை அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவிக்க பலமுறை முயற்சித்தேன். இருப்பினும் அது பயனளிக்கவில்லை. மே 09 சம்பவம் நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.