இடர்பாடுகள் இருந்தும் சுற்றுலாத் துறையின் வளர்ச்சி வேகம் அதிகரிப்பு!
2025 ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 8 வரை இலங்கைக்கு 2.15 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் சுற்றுலாத் துறை வேகமான மீட்சியைக் காட்டுகிறது.
2019 ஈஸ்டர் தாக்குதல்கள், கோவிட்-19, மேலும் அண்மைய டிட்வா புயல் போன்ற சவால்களுக்குப் பிறகு இந்ததுறை மீண்டும் வளர்ச்சி பாதையில் நகர்கிறது.
டிசம்பர் முதல் வாரத்தில் மாத்திரம் 50,222 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். நவம்பர் மாதமும் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இந்திய சுற்றுலாப் பயணிகளின் பங்கு மிகவும் அளப்பரியது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து சுற்றுலாத் தளங்களும் திறந்திருக்கும் நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
தெற்குக் கடற்கரை, எல்ல, மலைநாட்டு பகுதிகள் உள்ளிட்ட பிரபலமான இடங்களில் சுற்றுலா நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.
சுற்றுலாத்துறையில் வளர்ச்சியை அதிகரிக்க, இலங்கை தூதரகங்கள் சர்வதேச சுற்றுலா நிறுவனங்களும் ஊடகங்களும் இணைந்து நிகழ்வுகளை நடத்த வேண்டும் என்றும், சிறப்பு ஊடக பரிச்சயப் பயணங்களையும் (FAM tours) ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அந்த சபை அறிவுறுத்தியுள்ளது.
கடந்த வாரம் 2,000 பயணிகளுடன் Mein Schiff பயணக் கப்பல் இலங்கையை வந்தடைந்தது. சுற்றுலாத் துறைக்கு நேர்மறையான ஊக்கத்தையும் வழங்கியது.
அதே நேரத்தில், தென் கொரிய பௌத்த குழுவொன்று தங்கள் புனித யாத்திரையை மனிதாபிமான உதவிப் பணியாக மாற்றி, புயலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவி வழங்கியது. மேலும் ஒரு குழு விரைவில் வரவுள்ளது.
இலங்கை மக்களின் அன்பும் மனவளமும் சுற்றுலாப் பயணிகளால் பாராட்டப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
சமீபத்திய சவால்களுக்குப் பிறகும், இலங்கையின் சுற்றுலாத் துறை வலுவாகவும் பாதுகாப்பாகவும் மீண்டும் உலகை வரவேற்கத் தயாராக உள்ளதென சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.





