பேரிடரால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அரசு பொறுப்பு கூறவேண்டும்: நாடாளுமன்றில் வலியுறுத்து
பேரிடரால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று (18) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“தாழமுக்கம் தாக்கம் ஏற்படுவதால் சீரற்ற காலநிலை நிலவக்கூடும், இதற்கு தயாராக வேண்டும் என வளிமண்டளவியல் திணைக்களம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தது.
வெள்ள அபாயம் குறித்தும் எச்சரிக்கப்பட்டிருந்தது. எனினும், அரசாங்கத்தால் முன்னாயத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
டிசம்பர் 26 ஆம் திகதிவரை அரசாங்கம் நித்திரை நிலையிலேயே இருந்துள்ளது. டிசம்பர் 27 ஆம் திகதிதான் அனர்த்த முகாமைத்துவ கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
பேரிடர் தடுப்பு விடயத்தில் ஜனாதிபதி தனது பொறுப்பை நிறைவேற்ற தவறியுள்ளார். ஜனாதிபதியின்கீழ் பெரும்பாலான அரச நிறுவனங்கள் இருப்பதும் இதற்கு காரணம்.
நீர் வெளியேற்றல் முகாமைத்துவத்தை முறையாக கையாண்டிருந்தால் வெள்ள அனர்த்தங்களை கட்டுப்படுத்தி இருக்கக்கூடும்.” என்றார் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி.





