மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு
மகாவலி ஆற்றுப் பகுதியை அண்மித்துள்ள பல தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் 24 மணி நேரத்திற்கு நீட்டித்துள்ளது.
இந்த எச்சரிக்கை நாளை (20) மாலை 5.30 வரை அமலில் இருக்கும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மகாவலி நீரேந்தும் பகுதிகளில் சில இடங்களில் பெய்த பலத்த மழை மற்றும் மகாவலி பள்ளத்தாக்கின் மேல்நிலை நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் வெளியேற்றம் காரணமாக ஏற்படும் சிறிய வெள்ள அபாயம் காரணமாக நேற்று (18) இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் தொடர்ந்தும் கிண்ணியா, மூதூர், கந்தளாய், சேருவில, வெலிகந்த, லங்காபுர, தமன்கடுவ மற்றும் திம்புலாகல பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகளில் வசிப்பவர்கள் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





