பருவநிலை மாற்றத்தின் விளைவு!!! சீனாவில் கடும் மழை
சீனாவின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சிச்சுவான் மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அந்த மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 40,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிச்சுவான் மாகாணத்தின் யான் நகரில் சுமார் 14 மணித்தியாலங்களுக்கு தொடர்ச்சியாக 300.7 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பல வீடுகள் இடிந்துள்ளதாகவும் சீன அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹெனான் மாகாணத்தின் ஷென்சு நகரிலும் கனமழை பெய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அப்பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
சீன வானிலை அதிகாரிகளின் கூற்றுப்படி, கடந்த திங்கட்கிழமை இரவு ஜியாங்சு மாகாணத்தின் வான் பகுதியில் 275.4 மிமீ மழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலையால் உலகின் பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் சீனாவில் கனமழை மற்றும் கடுமையான வெள்ளம் பற்றிய தகவல்கள் வந்துள்ளன.
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பருவமழை பெய்து வருவதால், உடமைகள் மற்றும் உயிர் சேதங்களும் பதிவாகி வருகின்றன.
பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் உலக நாடுகளை கடுமையாக பாதித்து வருவதாக சர்வதேச விமர்சகர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.