பூமிக்கு அருகில் உயிர் வாழத் தகுதியுள்ள கோள் கண்டுபிடிப்பு
பூமிக்கு 18 ஒளி ஆண்டுகள் தொலைவில் உயிரினங்கள் வாழக்கூடிய கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமியைப் போன்ற ஜி.ஜே 251 சி (GJ 251 c) என்ற புதிய வெளிக்கோள் (Exoplanet) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விண்வெளி ஆய்வுகள் தொடர்பான விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் கிரகம் ‘உயிர் வாழத் தகுதியுள்ள மண்டலத்தில்’ (Habitable Zone) சுற்றி வருவதால், அங்கு திரவ நீர் இருக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஜி.ஜே 251 சி கோள் பூமியைப் போல 3.8 முதல் 4 மடங்கு வரை எடை கொண்டுள்ளமையால் அதனை “சூப்பர்-எர்த் (Super Earth) என்று அழைக்கிறார்கள். அதன் பெரிய பருமன் காரணமாக, இது திடமான வளிமண்டலத்தையும், மேற்பரப்பில் திரவ நீரையும் தக்கவைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அருகாமையில் உள்ள இந்தக் கிரகத்தை அடுத்த தலைமுறை சக்திவாய்ந்த தொலைநோக்கிகள் மூலம் அதன் வளிமண்டலம் மற்றும் பாறை அமைப்பை எளிதில் ஆய்வு செய்ய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கிரகம் சுற்றிவரும் விண்மீன், சிவப்பு குள்ள நட்சத்திரம் என்பதால், அதன் தீவிரமான விண்மீன் வெடிப்புகள் (Flares) உயிர்கள் வாழ்வதற்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற ஆபத்தும் உள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
அடுத்தகட்டமாக, இந்தக் கிரகத்தின் வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன், நீராவி போன்ற வாயுக்கள் உள்ளதா என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்யவுள்ளனர்.





