முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை?
பொலிஸ் விசாரணை முடிவடைந்து அது தொடர்பான அறிக்கை கிடைத்த பின்னரே நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல தொடர்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இடம்பெறும்.
ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நிஹால் அபேசிங்க எம்.பி. மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.
விபத்து சம்பவமொன்று தொடர்பில் முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அவர் மதுபோதையில் வாகனம் செலுத்தியே விபத்தை ஏற்படுத்தியுள்ளார் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் அசோக ரன்வலவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமா என தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரிடம் வினவப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர்,
“ சம்பவம் தொடர்பில் ஊகங்களின் அடிப்படையில் கட்சி முடிவுகளை எடுக்க முடியாது.
சட்ட நடவடிக்கைக்கான ஏற்பாடு குறித்து பொலிஸாருக்குதான் முடிவு எடுக்க வேண்டிய அதிகாரம் உள்ளது.
ஒரு சட்ட சூழ்நிலை ஏற்பட்டால், ஒரு கட்சியாக அது குறித்து நாங்கள் ஒரு முடிவை எடுப்போம்.
கட்சி அளவிலான எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னர், போக்குவரத்து விபத்து சம்பவம் குறித்த பொலிஸாரின் முடிவுகளுக்காகக் கட்சி காத்திருக்கின்றது.” என்றார்.
அதேவேளை, தனது கலாநிதி பட்டம் தொடர்பிலும் அசோக ரன்வல சர்ச்சையில் சிக்கினார். இதனால் பதவி விலகவேண்டிய நிலைகூட அவருக்கு ஏற்பட்டது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே தற்போது மீண்டுமொரு சர்ச்சையில் அவர் சிக்கியுள்ளார். அரசியல் களத்திலும் இச்சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.





