மதுபான வரி மூலம் 5,000 கோடியும், பால் மூலம் 200 கோடியும் வருவாய் ஈட்டும் டெல்லி

நடப்பு நிதியாண்டில் மதுபானங்கள் மீதான வரிகள் மூலம் ரூ.5,000 கோடிக்கும் அதிகமாகவும், பால் மற்றும் பால் பொருட்கள் மூலம் ரூ.210 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி அரசு சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளது.
டெல்லி சட்டமன்றத்தில் பாஜக எம்எல்ஏ அபய் வர்மா கேட்ட கேள்விக்கு பதிலளித்த அரசாங்கம், 2024-25 நிதியாண்டில் மதுபான விற்பனையின் மீதான கலால் வரி மற்றும் வாட் (மதிப்பு கூட்டப்பட்ட வரி) மூலம் ரூ.5,068.92 கோடி வருவாய் ஈட்டியதாகக் தெரிவித்துள்ளது.
பால் மற்றும் பால் பொருட்கள் மூலம் ஜிஎஸ்டியில் ரூ.209.9 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது
மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியை பாஜக தொடர்ந்து தாக்கி வரும் நேரத்தில் இந்தக் கேள்வி வருகிறது. முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் இந்த ஊழல் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்ட ஆம் ஆத்மி தலைவர்களில் அடங்குவர்.
மேலும் கடந்த மாதம் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் கட்சி தோல்வியடைந்ததில் இந்தப் பிரச்சினை பெரும் பங்கு வகித்ததாகக் கருதப்படுகிறது.
ரேகா குப்தா தலைமையிலான புதிய பாஜக அரசு, 2023-24 ஆம் ஆண்டில் ரூ.5,164 கோடியும், 2022-23 ஆம் ஆண்டில் ரூ.5,547 கோடியும், 2021-22 ஆம் ஆண்டில் ரூ.5,487 கோடியும் மதுபான வரிகளாக வசூலிக்கப்பட்டதாக அறிவித்தது.