ஆப்பிரிக்க நாடான பெனினில் ஆட்சி கவிழ்ப்பு! எல்லை மூடப்பட்டதாக அறிவிப்பு!
மேற்கு ஆப்பிரிக்க நாடான பெனினில் (Benin) இராணுவ வீரர்களின் ஒரு பகுதியினர் ஜனாதிபதி பேட்ரிஸ் டாலோனை ( Patrice Talon) பதவி நீக்கம் செய்து அதிகாரத்தைக் கைப்பற்றியதாக அறிவித்துள்ளனர்.
பெனினில் உள்ள பிரெஞ்சு தூதரகத்திலிருந்து வந்த செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் தலைமையகமான கோட்டோனோவின் (Cotonou) முக்கிய நகரத்தில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அரசியலமைப்புச் சட்டம் இடைநிறுத்தப்படுவதாகவும், அனைத்து நில எல்லைகளையும் , நாட்டின் வான்வெளியையும் மூடுவதாகவும் வீரர்கள் அறிவித்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் நிலமை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், இராணுவத்தின் பெரும்பகுதி இன்னும் விசுவாசமாக உள்ளதாகவும் வெளியுறவு அமைச்சர் ஷெகுன் அட்ஜாடி பக்காரி (Shegun Adjadi Bakari) தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த குழுவினர் தொலைக்காட்சியை மட்டுமே கைப்பற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் அவர் தற்போது எங்கு இருக்கிறார் என்ற தகவல் வெளியாகவில்லை.





