அருணாசலுக்கு அருகே உலகின் மிகப்பெரிய அணை கட்டுமானம் பணியை தொடங்கிய சீனா

திபெத்திற்கான இந்திய எல்லையான அருணாசல பிரதேசத்துக்கு அருகே, பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா உலகின் மிகப்பெரிய அணையின் கட்டுமானப் பணிகளை தொடங்கியது. சீன பிரதமா் லி கியாங் நியிங்ஜி நகரில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார்.
இந்த அணை திட்டம் கடந்த டிசம்பர் மாதத்தில் அங்கீகரிக்கப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த மாபெரும் அணை, 16,780 கோடி டாலர் (ரூ.14.46 லட்சம் கோடி) மதிப்பிலான திட்டமாக, 5 அடுக்கு நீர் மின்நிலையங்களுடன் அமைக்கப்படுகின்றது. ஆண்டுக்கு 30,000 கோடியும் அதிகமான கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அணையின் கட்டுமானம், பிரம்மபுத்திரா நதியின் நீரோட்டத்தை பாதிக்கும் என்றும், அவசர காலங்களில் சீனா அதிக அளவில் நீரை வெளியேற்றினால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
இந்த அணை, நிலநடுக்க அபாயம் உள்ள புவியியல் தட்டில் அமைக்கப்படுகின்றது. சீன அதிகாரிகள், அணை பாதுகாப்பானது மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்னுரிமையாக அமையப்போவதாக உறுதி அளித்துள்ளனர்.
இந்தியாவும், அருணாசல பிரதேசத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்டுவதற்கான திட்டங்களை முன்வைத்துள்ளது. 2006-ஆம் ஆண்டில், இரு நாடுகளும் நதிகளின் நீரின் பற்றிய தகவல்களை பரிமாற விருப்பம் காட்டி, நிபுணா் குழுவை அமைத்தன.