2050 ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் தொடர்பான இறப்புகள் அதிகரிக்கும்!!
2050 ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் தொடர்பான இறப்புகள் அதிகரிக்கும் என ஆய்வொன்று கணித்துள்ளது.
ஆய்வின்படி நோய் அறிதல் 30.5 மில்லியனையும், இறப்புகள் 18.6 மில்லியனையும் எட்டும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இது தற்போதைய புள்ளிவிவரங்களை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் புற்றுநோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறித்த நாடுகளில் நோயை கண்டறிவதற்கான பரிசோதனைகள் குறைந்த அளவில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில், உலகளவில் 18.5 மில்லியன் புதிய புற்றுநோய் நோயாளிகள் இனங்காணப்பட்டதுடன், 10.4 மில்லியன் இறப்புகள் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இறப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு குறைவான வளங்களைக் கொண்ட நாடுகளில் நிகழ்ந்துள்ளதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் புற்றுநோய் இறப்புகளில் சுமார் 41.7 சதவீதம் புகையிலை, மது, ஆரோக்கியமற்ற உணவுமுறைகள், அதிக உடல் நிறை குறியீட்டெண், சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் காற்று மாசுபாடு போன்றவற்றால் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




