விஜயின் பிரசாரக் கூட்டத்தில் உயிரிழந்த 35 பேரின் உடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கரூரில் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் 35 பேரின் உடலங்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 28 பேரும், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தலா 2 பேரும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள நால்வரின் உடலங்களை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கரூர் அரச மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 50 பேரும், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 61 பேரும் என மொத்தம் 111 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 17 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தோர் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கரூர் பகுதியில் நேற்று பிற்பகல் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்த நிலையில், கூட்ட நெரிசல் காரணமாக 39 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.