அவுஸ்திரேலிய துப்பாக்கிச்சூடு – துப்பாக்கிதாரி தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்
அவுஸ்திரேலியாவின் பொண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரில் ஒருவர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சஜித் அக்ரம், தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என அங்குள்ள பொலிஸ் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1998 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்த சஜித் அக்ரம், அதற்குப் பிறகு ஆறு முறை மட்டுமே இந்தியாவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது குடும்பத்தினருடன் அவர் குறைந்த தொடர்பே வைத்திருந்ததாகவும், அவரது தீவிர செயற்பாடுகள் குறித்து குடும்பத்தினருக்கு எந்தத் தகவலும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 வயதான சஜித் அக்ரமும், அவரது 24 வயது மகன் நவீதும் தந்தையும் மகனும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சஜித் அக்ரமுக்கு இந்தியாவில் எந்த குற்றப் பதிவும் இல்லை என்றும், அவரது தீவிரவாத நடவடிக்கைகளுக்கு இந்தியா அல்லது தெலுங்கானாவுடன் தொடர்பு இல்லை என்றும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரது குழந்தைகள் அவுஸ்திரேலியாவில் பிறந்தவர்கள் மற்றும் அந்நாட்டு குடிமக்கள் என்றும் அதிகாரிகள் கூறினர்.
யூதர்களின் நிகழ்வொன்றை இலக்கு வைத்து நேற்றுமுன் தினம் மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்துனர்.
தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரான 50 வயதுடைய நபர் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
அத்துடன் 24 வயதான நவீத் அக்ரம் என பெயரிடப்பட்ட மற்றொரு துப்பாக்கிதாரி ஆபத்தான நிலையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
குறித்த தாக்குதல் பல மாதங்களாகத் திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவுஸ்திரேலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





