“தமிழ்த் தேசிய கட்சிகள் பிளவுபட்டுள்ளதால் தமிழர்களுக்கான தீர்வு மூடி மறைக்கப்படுகின்றது” – பொதுச்செயலாளர் ஜயசூரிய
“தமிழ்த் தேசியக் கட்சிகள் பிளவுபட்டு நிற்பதால் தமிழர்களுக்கான தீர்வு திட்டத்தின் முக்கியத்துவமும் மூடி மறைக்கப்பட்டுவருகின்றது. எனவே, பொது வேலைத்திட்டத்தின்கீழ் வடக்கில் இருந்து ஒருமித்த குரல் அவசியம்.”இவ்வாறு ஐக்கிய சோஷலிசக் கட்சியின்(United Socialist Party) பொதுச்செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய(Siritunga Jayasuriya) வலியுறுத்தினார்.
மாகாணசபைத் தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் iftamil.com இடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஆளுங் கட்சிக்கான மக்கள் ஆதரவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு தேர்தல்களில்கூட ஆளுங்கட்சிக்கு தோல்வி ஏற்பட்டுவருகின்றது.எனவே, மாகாணசபைத் தேர்தலை இழுத்தடிப்பதற்கே அதிகார தரப்பு முற்படக்கூடும். அதற்கான ஆயுதமாக எல்லை நிர்ணய விடயம் பயன்படுத்தப்படலாம்.
எனினும், இந்தியா மற்றும் ஐநா மனித உரிமைகள் பேரவை என்பன மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அழுத்தம் கொடுத்துவருகின்றன. இந்த அழுத்தத்தால் தேர்தல் நடத்தப்படுவதற்குரிய சாத்தியமும் உள்ளது. எது எப்படி இருந்தாலும் இவ்வருட இறுதிக்குள் அல்லது அடுத்த வருடம் ஆரம்பத்தில் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும்.
அதேவேளை, மஹிந்த, ரணில் ஆட்சிகாலங்களின்போது, வடக்கில் அரசியல் பிரச்சினை இல்லை என்ற விம்பம் உருவாக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையிலும் தமிழர்களுக்கான உரிமை சார்ந்த விடயங்களின் முக்கியத்துவம் மழுங்கிவருகின்றது.
தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கிடையிலான பிளவும் இதற்கு காரணம். பிளவுகள் இருந்தாலும் பொது வேலைத்திட்டத்தின்கீழ் வடக்கில் இருந்து ஒருமித்த குரலொன்று அவசியம். அப்போதுதான் தீர்வுக்குரிய அழுத்தம் பிரயோகிக்ககூடிய சூழ்நிலை உருவாகும்.” என்றார் சிறிதுங்க ஜயசூரிய.





