கொழும்பில் பதற்றம்: பல்கலை மாணவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (07.06.2023) முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு அருகில் வைத்து, இந்த பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ள பௌத்த – பாலி பல்கலைக்கழகம் உடனடியாக திறக்கப்பட வேண்டும், மாணவர் சங்கங்கள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும்,
1995/37 சட்டத்தை மாற்றி பௌத்த – பாலி பல்கலைக்கழகத்தை பட்டத்தினை விற்கும் வியாபார நிலையமாக மாற்றும் அரசாங்கத்தின் சதியை முறியடிப்போம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட பல தரப்பினர் இன்று (7) ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தினால் பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படக்கூடும் என கோட்டை, கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனித்தெரு வீதி காவல் நிலையங்கள் வழங்கிய தகவலை கவனத்தில் கொண்டு கோட்டை நீதவான் நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மதுஷன் சந்திரஜித், அந்த அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தின் அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர், முன்னிலை சோசலிச கட்சியின் துமிந்த நாகமுவ மற்றும் லஹிரு வீரசேகர உள்ளிட்ட 13 பிரதிவாதிகளுக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அலரி மாளிகை, பிரதமர் அலுவலகம், ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லம், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு, காலி முகத்திடல் மற்றும் காலி முகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து NSA சுற்றுவட்டத்திற்குள் நுழைவதைத் தவிர்க்குமாறும் உரிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க வேண்டாம் எனவும் பொதுமக்களைத் தூண்டும் வகையில் வன்முறைச் சம்பவங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் கோட்டை நீதவான் நீதிமன்றம் தனது உத்தரவில் பிரதிவாதிகளுக்கு அறிவித்துள்ளது.