புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஊதிய மோசடி: விக்டோரியா காய்கறிப் பண்ணை மீது வழக்கு
“ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணுக்கு கிழக்கே அமைந்துள்ள ‘பாமர்ஸ்’ (Bulmers) காய்கறிப் பண்ணை, 28 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சுமார் 6 இலட்சத்து 45 ஆயிரம் டொலர் ஊதியத்தைக் குறைவாக வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2019 முதல் 2023-ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், வேலை நேரத்தைக் கணக்கிடாமல் நிலையான வாராந்திர ஊதியத்தை வழங்கியதன் மூலம் அந்நிறுவனம் தொழிலாளர் சட்டத்தை மீறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு தொழிலாளிக்கும் 1,500 முதல் 39,000 டொலர் வரை நிலுவைச் சம்பளம் வழங்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ள நியாயமான பணி குறைதீர்ப்பாளர் (Fair Work Ombudsman), விமானக் கட்டணம் மற்றும் தங்குமிட வசதிகளுக்காகத் தொழிலாளர்களின் சம்பளத்தில் சட்டவிரோதமாகப் பணம் பிடித்தம் செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கீரை மற்றும் புரோக்கோலி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இந்தப் பண்ணை மீதான விசாரணை, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.





