உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கை விரைவில் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் அது குறித்த நிலைப்பாடு விரைவில் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் துணை செயலாளர் நாயகம் அருட்தந்தை டோனி மார்டின் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த முழுமையான விசாரணை அறிக்கை கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், குறித்த அறிக்கை இருவட்டுக்களாகவே கிடைக்கப் பெற்றுள்ளது. அதனை இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் சட்டத்தரணிகள் குழாம் ஆராய்ந்து வருகிறது.
அறிக்கை முழுமையாக ஆராயப்பட்டதன் பின்னர் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் அது குறித்த எமது நிலைப்பாடுகள் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும்.
தற்போது வரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஏனையோர் அறிந்துள்ள உண்மைகள் மாத்திரமே எமக்கும் தெரியும். எனவே எதிர்வரும் ஓரிரு வாரங்களுக்குள் எமது நிலைப்பாட்டை அறிவிக்க முடியும் என்றார்.