விண்வெளியில் நடந்த அதிசயம்! ஆச்சரியமிக்க கோள் அமைப்பு கண்டுபிடிப்பு – விஞ்ஞானிகள் வியப்பு
விண்வெளிப் பரப்பில் புதிய வகையிலான கோள் அமைப்பினை நாசா கண்டுபிடித்துள்ளது.
விஞ்ஞான உலகில் வியப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரே இரட்டை நட்சத்திர அமைப்பைச் சுற்றிவரும் மூன்று பூமி அளவுள்ள புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பூமியிலிருந்து சுமார் 120 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இந்தக் கோள் அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பு, இதுவரை காலமும் விஞ்ஞானிகள் நம்பியிருந்த விண்வெளி விதிகளைத் தலைகீழாக மாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு நெருக்கமான நட்சத்திரங்களைக் கொண்ட தொகுதியில் கடுமையான ஈர்ப்பு விசை காரணமாகக் கோள்கள் உருவாகுவது அசாத்தியம் என்று இதுவரை விஞ்ஞானிகள் நம்பியிருந்தனர்.
எனினும் நாசாவின் TESS விண்கலம் கண்டறிந்த TOI-2267 எனப்படும் இந்த அமைப்பில், மூன்று கோள்கள் வெற்றிகரமாக உருவாகிச் சுற்றி வருகின்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மூன்று கோள்களும் பாறைகளால் (Rocky Planets) உருவானதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு நட்சத்திரங்களையும் சுற்றிவரும் கோள்களைக் கொண்ட முதல் இரட்டை அமைப்பு இதுவென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதாவது இரண்டு கோள்கள் ஒரு நட்சத்திரத்தையும், மூன்றாவது கோள் மற்றொரு நட்சத்திரத்தையும் சுற்றி வருகின்றன.
புதிய கண்டுபிடிப்பின் மூலம் கோள் உருவாக்கம் குறித்த கோட்பாடுகளின் வரம்புகளை மீண்டும் ஆராய வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளதாக, ஆய்வாளர் செபாஸ்டியன் ஸுனிகா-ஃபெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.
புதிய கோள் அமைப்பு ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி (JWST) போன்ற அதிநவீன கருவிகளுக்குச் சவாலாக அமைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





