வெளிநாடொன்றில் சிறைகளில் உள்ள 44 இலங்கையர்களுக்கு மன்னிப்பு
ஐக்கிய அரபு இராஜ்ஜியம் முழுவதும் பல்வேறு சிறைகளில் உள்ள 44 இலங்கையர்களுக்கு அரச ஆணை மூலம் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் 52வது தேசிய தினமான டிசம்பர் 02 ஆம் திகதியன்று அரச ஆணை மூலம் இந்த இலங்கைக் கைதிகள் மன்னிக்கப்பட்டதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் வெளிவிவகார அமைச்சு, அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அறிவித்துள்ளது.
மன்னிக்கப்பட்ட 44 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க COP28 க்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு அண்மையில் விஜயம் செய்ததைத் தொடர்ந்து இந்த மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது, இது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் சாதகமான வேகத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த கருணைச் செயல் இலங்கைக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என்று அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.