எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு
ஒவ்வொரு மனிதனுடைய ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் உடற்பயிற்சி என்பது இன்றியமையாத ஒன்று. உடற்பயிற்சி என்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் தோற்றத்தை மேம்படுத்தவும், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஒரு சிறந்த வழியாகும்.
உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பு அளவைக் குறைக்க உதவுகிறது. இது இதயநோய், பக்கவாதம், நீரிழிவு மற்றும் பலவகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
உடற்பயிற்சி மன அழுத்தத்தைக் குறைக்கவும், மனநிலையை மேம்படுத்தவும் உதவுகிறது. இது மனச்சோர்வு, பதட்டம் மற்றும் பிற மனநல பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
உடற்பயிற்சி செய்பவர்கள் காலையில் உட்கொள்ள வேண்டிய உணவுகள்
உடற்பயிற்சி பயிற்சி செய்பவர்களுக்கு முறையான ஆரோக்கியமான உணவு என்பது மிக முக்கியமானது ஆகும். முழு தானியங்கள், அரிசி, ஓட்ஸ், பார்லி, பக்வீட் போன்றவை நார்ச்சத்து நிறைந்த உணவுகள். இது உங்கள் உடல் ஆற்றலை மேம்படுத்த உதவுகிறது.
முட்டை, பால், தயிர், பருப்பு வகைகள், மீன் போன்றவை புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இது தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. பழங்கள், காய்கறிகள் சாப்பிடலாம். அவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக காணப்படுகிறது.
குறிப்பாக, காலை உடற்பயிற்சிக்கு பின், ஓட்ஸ் கஞ்சி, முட்டை வெள்ளைக்கரு, பால் மற்றும் சீஸ் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். உடற்பயிற்சி செய்பவர்கள் தங்கள் உடல்நல நிலை மற்றும் உடற்பயிற்சி திட்டத்தைப் பொறுத்து, தங்களுக்கான சரியான உணவுத் திட்டத்தை உருவாக்க வேண்டும். ஒரு உணவியல் நிபுணரிடம் ஆலோசிப்பது மிகவும் நல்லது.