இலங்கை மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
இலங்கையில் அனைத்து மக்களினதும் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் இலக்கை அடைவதற்காக சமூக நீர்வழங்கல் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இதனை தெரிவித்தார்.
அந்தவகையில், நாடளாவிய ரீதியில் குடிநீர்த் தேவையில் 62% சதவீதத்தைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் மொத்த குடிநீர்த் தேவையில் 85% சதவீத நீர் வழங்கல் இலக்கைப் பூர்த்தி செய்வதற்கு அமைச்சு செயற்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தடையின்றி தொடர்ச்சியான நீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காகவே அரசாங்கம் நீர்க் கட்டணத்தை அதிகரிக்க, கொள்கை ரீதியிலான தீர்மானத்தை எடுக்க நேரிட்டதாகவும், மக்கள் குடிநீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டுக்கும் மக்களுக்கும் ஓரளவு நிவாரணம் கிடைக்குமெனவும் இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த இதனைத் தெரிவித்தார்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை செயற்பட முடியாத கஷ்டப் பிரதேசங்களிலும் மற்றும் மலையகத்தின் பல்வேறு இடங்களிலும், அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களம் மூலம் அப்பிரதேச மக்களுக்கு அவசியமான குடிநீரை வழங்க பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அதில் பெரும்பாலானவைகளின் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்காக துரித, இடைக்கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் நனோ தொழில்நுட்ப நீர் சுத்திகரிப்பு முறைமைகளை நிறுவும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் பெரும்பாலானவைகளின் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு வருவதாகவும், குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், சிறுநீரக நோயாளிகள் அதிகமாக உள்ள பிரதேசங்களுக்காக இந்த நனோ தொழில்நுட்ப நீர் சுத்திகரிப்பு முறைகள் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.