Oceangate நிறுவனத்தில் இணையதளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்கள் முடக்கம்
Oceangate நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், Facebook, Instagram உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளப் பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன.
ஓசியாங்கேட் எக்ஸ்பெடிஷன்ஸ் என்ற நிறுவனம் வடிவமைத்த டைட்டன் என்ற நீர்மூழ்கிக் கப்பல் டைட்டானிக் கப்பலை பார்வையிட சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற நிலையில், கடந்த மாதம் 18ஆம் திகதி விபத்துக்குள்ளானது.
இதில் பயணித்த ஐவரும் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் தொழிலதிபர் ஷெசாதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலைமான் தாவூத், ஓசியாங்கேட் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டாக்டன் ரஷ், பிரிட்டன் தொழிலதிபர் ஹமிஷ் ஹார்டிங், பிரெஞ்சு கடற்படையின் முன்னாள் கமாண்டோ பால் ஹென்றி நர்கியோல் ஆகியோர் இவ்வாறு உயிரிழந்தனர்.
இந்த விபத்து உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்குவதற்கு Oceangate நிறுவனம் பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதேவேளை, டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலை தயாரித்த Oceangate நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், Facebook, Instagram உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளப் பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்படவிருந்த அனைத்து கடல் பயணங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஓசியங்கேட் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால், இது தொடர்பாக அந்நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1912 ஆம் ஆண்டு, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்த போது, டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்நிலையில், டைட்டானிக் கப்பல் தற்போது கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் தீவில் இருந்து 740 கி.மீ. தொலைவில் உள்ள கடல் பகுதியில் காணப்படுகின்றது.