மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கினால் முதல் தடவையாக நடத்தப்பட்ட மன்னார் பிறிமியர் லீக்
மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கினால் மன்னார் பிறிமியர் லீக்(MPL) என்ற சுற்றுப்போட்டி கடந்த வருடம் மன்னார் மாவட்டத்தில் முதல் தடவையாக நடத்தப்பட்டது. குறித்த போட்டியின் 2வது சீசன் (SEASON-02 )நேற்று (3) செவ்வாய்க்கிழமை மாலை மின்னொளியில் ஆரம்பமானது.
குறித்த சுற்றுப்போட்டியில் 12 உதைபந்தாட்ட கழகங்களை சேர்ந்த 300 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.மன்னார் மாவட்ட வீரர்கள் தேசியத்திலும்,சர்வதேச மட்டத்திலும் தமது திறமைகளை வெளிக்கொண்டு வரும் முகமாக அச் சுற்றுப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆரம்ப நிகழ்வாக நேற்று திங்கட்கிழமை(3) மாலை மன்னார் நகரத்தில் இருந்து 12 உதைபந்தாட்ட கழகங்களை சேர்ந்த 300 வீரர்கள் ,உரிமையாளர்கள்,விருந்தினர்கள் ஊர்வலமாக சென்று மன்னார் பொது விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் வைக்கப்பட்டுள்ள தேசிய சாதனையாளர் அமரர் பியுசிலஸ் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி அங்கிருந்து வாகனம் பவனி ஊடாக ஜோசப்வாஸ் நகரில் அமைந்துள்ள முன்னாள் ஆயர் ராஜப்பு யோசேப்பு ஆண்டகை விளையாட்டு மைதானத்தை சென்றடைந்தனர்.
பின்னர் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
பின்னர் உரிமையாளர்கள் மற்றும் வீரர்கள் அறிமுகம் இடம் பெற்றதோடு,முதலாவது போட்டி மின்னொளியில் ஆரம்பமானது.
முதல் போட்டியானது மன்னார் மாட்டிஸ் உதைபந்தாட்ட கழகத்திற்கும்,லக்கி உதைபந்தாட்ட கழகத்துக்கும் இடம் பெற்றது.
இதன்போது மாட்டிஸ் உதைபந்தாட்ட கழகம் 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாணத்தின் முன்னாள் பிரதம செயலாளர் அ.பத்திநாதன்,மற்றும் கௌரவ விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.