ஆதரவற்றவர்களை வரவேற்கும் இடமாகிய அயர்லாந்து!
ஆதரவற்றவர்களை வரவேற்கும் இடமாக அயர்லாந்து எப்போதுமே காட்சியளிக்கிறது என்றும், போர் மற்றும் துன்புறுத்தல்களினால் பாதிக்கப்பட்டு புகலிடம் தேடுவோர்க்கு ஒருமைப்பாட்டு உணர்வுடன் விருந்தோம்பலை அளிக்கின்றது என்றும் அயர்லாந்து ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.
தனது கருத்துக்களை வெளியிட்டுள்ள அயர்லாந்து ஆயர் பேரவை, அண்டை நாட்டு மக்களை உள்ளூர் சமூக மக்களுடன் இணைப்பதன் வழியாக சமூகத்திற்கு தங்களின் திறனாலும் கொடையாலும் மக்கள் அளிக்கும் பங்கிற்கு ஆதரவளிக்க முடிகின்றது என்றும் தெரிவித்துள்ளது.
ஒரு நீண்ட புலம்பெயர்ந்த வரலாற்றைக் கொண்ட மக்களாக, வேற்று நிலத்தில் அடைக்கலம் தேடுவது எப்படி இருக்கும் என்பதையும், வரவேற்கப்படுதல், பாதுகாக்கப்படுதல், ஒருங்கிணைக்கப்படுதல் எவ்வளவு முக்கியம் என்பதையும் அயர்லாந்து நன்கு அறியும் என்பதை எடுத்துரைத்துள்ளது ஆயர் பேரவை.
ஒவ்வொரு மனிதனுக்கும் கடவுள் கொடுத்த மாண்பு நற்செய்தியின் இதயத்தில் உள்ளது மற்றும் கத்தோலிக்க சமூகபோதனை என்ற அழகான கொடையை அது வெளிப்படுத்துகின்றது என்றும் தெரிவித்துள்ள அயர்லாந்து ஆயர் பேரவை, ஒவ்வொரு நபரின் மாண்பு, பொது நன்மை, உலகளாவிய இலக்கு, ஒடுக்கப்பட்டவர்களுடன் ஒற்றுமை ஆகியவற்றில் வேரூன்றி புகலிடம் தேடுவோர்க்கு அயர்லாந்து உதவி வருகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளது.
அரசு, உள்ளூர் தலத்திருஅவை, பள்ளிகள், மறைமாவட்டங்கள் மற்றும் மத அமைப்புகளின் உறுப்பினர்கள், என அயர்லாந்து முழுவதும் உள்ளவர்களால் மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகளுக்கு நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்த நிலையில், தலத்திருஅவை தங்களது செயலால் நற்செய்தியை எடுத்துரைக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளது ஆயர் பேரவை.
பாதுகாப்பு, தங்குமிடம், மாண்பு ஆகியவற்றை நாடி அயர்லாந்தை நோக்கி வருபவர்களைக் கவனித்துக்கொள்வது நமது பொறுப்பு என்பதை, புகலிடம் தேடுவோர்க்கான உலக நாள் நினைவூட்டுகின்றது என்றும் அத்தகைய மக்களுக்கான சிறந்த வாழ்வை உறுதி செய்ய சிந்தனை, ஆலோசனை, திட்டமிடல் மற்றும் கடின உழைப்பு தேவைப்படுகிறது என்றும் எடுத்துரைத்துள்ளது.
நலவாழ்வு, மருத்துவம், தங்குமிடம், கல்வித் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் புதிதாக வருபவர்களுக்கு ஆதரவளிக்க அரசின் செயல்பாடுகள், அமைப்புக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஆயர் பேரவை, இதனால் உள்ளூர் உரையாடல் மற்றும் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து, ஒருமைப்பாடு மற்றும் சமூக ஒற்றுமையை நிலைநிறுத்த முடிகின்றது என்றும் எடுத்துரைத்துள்ளது.
தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் தெருக்களில் மக்கள் தங்குவது நம் கண் முன்னே நடக்கும் கொடுமையான செயல் என்று எடுத்துரைத்துள்ள அயர்லாந்து ஆயர் பேரவை, தீவிரவாதக் கருத்துக்களும் செயல்களும் அச்சம் மற்றும் இனவெறியை ஏற்படுத்தி நமது வரவேற்புக் கலாச்சாரத்தை சிதைக்கும் அபாயம் உள்ளது என்றும் கூறியுள்ளது.
சந்திப்புக்கு எதிரான இனவெறிக்கு அயர்லாந்தில் இடமில்லை என்று எடுத்துரைத்துள்ள ஆயர் பேரவை, ‘வரவேற்போம், பாதுகாப்போம், ஊக்குவிப்போம் மற்றும் ஒருங்கிணைப்போம்’ என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வரிகளையும் மேற்கோள்காட்டியுள்ளது.
புகலிடம் தேடும் பிரச்சனைக்குப் பின்னும் ஒவ்வொரு தனிமனிதரின் வாழ்வு இருக்கின்றது என்றும், அவரவரது வாழ்க்கை அனுபவங்களுடன் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள அயர்லாந்து ஆயர் பேரவை, இன்றைய நாளை விட நாளைய நாள் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையுடனும் எதிர்கால கனவுகளுடனும் குடும்பங்கள் நம்மை நேசிக்கின்றன என்றும் எடுத்துரைத்துள்ளது.