2.9 பில்லியனை அரசாங்கம் எவ்வாறு பயன்படுத்தப்பபோகிறது என்பதை விளக்க வேண்டும் : பிரதான எதிர்கட்சி கோரிக்கை!
பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்திடம் எந்தவொரு ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களும் கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் கிடைக்கவிருக்கும் கடன் உதவி எதிர்காலத்தில் உழைக்கும் வர்க்கத்தினரையும், வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்களையும் நெருக்கடிக்குள் தள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின் படி இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர்கள் கடன் கிடைக்கவிருக்கிறது. இலங்கை நிதிச் சந்தையில் குறித்த நிதியை எவ்வாறு அரசாங்கம் பயன்படுத்தப் போகின்றது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடன் பெறும்போது அவர்களின் ஒப்பந்தந்தங்களுக்கு அடிபணிய நேரிடும். சில சரத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாததனாலேயே நாம் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், ஒப்பந்தம் வெற்றி என்றாலும் நிபந்தனைகளில் யாருக்கு பாதிப்பு என்று நாம் சிந்திக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களும்இ உழைக்கும் மக்களும் பாரியளவில் பாதிப்புகளை சந்திக்கவுள்ளனர்.கடன்பெற்று கொள்ளும்போது வறுமையிலுள்ள மக்களையும் உழைக்கும் மக்களையும் பாதுகாக்கும் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.