கிளர்ச்சியாளர்களால் ஆம்புலன்சில் வைத்து உயிருடன் எரித்து கொல்லப்பட்ட தாய் மற்றும் மகன்!
இந்திய மாநிலம் மணிப்பூர் நடக்கும் வன்முறையில் தாய், மகன் உட்பட மூவர் ஆம்புலன்சில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி எனும் சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரியபோது, சிறுபான்மை பழங்குடியின சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதன் எதிரொலியாக அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருபிரிவினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் 100க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்ததாகவும், 310 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தலைநகர் இம்பாலில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. சுமார் 10 காவலர்களின் பாதுகாப்புடன் சென்ற அந்த ஆம்புலன்ஸை கிளர்ச்சியாளர்கள் வழி மறித்தனர்.ஐரோசெம்பா பகுதியில் குறித்த ஆம்புலன்சுக்கு கிளர்ச்சியாளர்கள் தீ வைத்தனர். இதில் ஆம்புலன்சில் இருந்த 8 வயது சிறுவன், அவரது தாய் மற்றும் இன்னொரு உறவினர் என மூன்று பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.
கலவரப் பகுதியில் 1,000 வீரர்கள் விரைந்துள்ளனர். மேலும் எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த இவர்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். தாய், மகன் உயிருடன் வைத்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.