கனடாவின் சனத்தொகையில் பாரிய வீழ்ச்சி: குடிவரவு கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்!
கடந்த பல தசாப்தங்களில் இல்லாதவாறு கனடாவின் சனத்தொகை முதன்முறையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் (Statistics Canada) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கனடா அரசாங்கம் குடிவரவு விதிகளில் கொண்டுவந்துள்ள கடுமையான கட்டுப்பாடுகளே இந்த சனத்தொகைச் சரிவுக்கு பிரதான காரணமாகக் கூறப்படுகின்றது.
புள்ளிவிபரங்களின்படி, கடந்த ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கனடாவின் சனத்தொகை 76,068 பேரால் குறைந்துள்ளது. 1940-களுக்குப் பிறகு பதிவான மிகக் கடுமையான மற்றும் இரண்டாவது காலாண்டு வீழ்ச்சி இதுவென பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தற்காலிக வதிவுரிமை (Non-permanent residents) எண்ணிக்கையை 2027 ஆம் ஆண்டிற்குள் மொத்த சனத்தொகையில் 5 சதவீதமாகக் குறைக்க கனடா அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
குறிப்பாக சர்வதேச மாணவர்கள் மற்றும் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் வருகை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் கூறியதாவது “எமது குடிவரவு முறையை மீண்டும் எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே எமது நோக்கம்,” என கனடாவின் நிதியமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெயின் (François-Philippe Champagne) பெர்லினில் வைத்துத் தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டில் தொழிலாளர் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய கனடா முன்னெடுத்த தீவிர குடிவரவுத் திட்டங்களால் சனத்தொகை 1 மில்லியனுக்கும் மேலாக அதிகரித்தது. எனினும், இதனால் ஏற்பட்ட சில சமூகப் பொருளாதார நெருக்கடிகளே தற்போது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு காரணமாகின:
மக்கள் தொகை அதிகரிப்பால் வீட்டு வாடகை மற்றும் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. சுகாதாரம் உள்ளிட்ட பொதுச் சேவைகளைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. மேலும் இளைஞர்களிடையே நிலவும் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளன.
பிரதமர் மார்க் கார்னியின் (Mark Carney) தலைமையிலான கனடா அரசாங்கம், அடுத்த ஆண்டு புதிய தற்காலிக வதிவுரிமை இலக்கை 673,650 இலிருந்து 385,000 ஆகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இது 2027 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் 370,000 ஆக மேலும் குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் புள்ளிவிபரங்களின்படி, ஒன்டாரியோ (Ontario) மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) ஆகிய மாகாணங்களிலேயே சனத்தொகை வீழ்ச்சி அதிகமாகக் காணப்படுகின்றது. அதேவேளை, ஆல்பர்ட்டா (Alberta) மற்றும் நுனாவுட் (Nunavut) பகுதிகளில் மட்டும் சனத்தொகை வளர்ச்சி பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.





