இலங்கையை மீட்க உலக தலைவர்களை அழைக்கவும் – ஹக்கீம் யோசனை
இலங்கையை மீட்பதற்காக சர்வதேச கொடையாளர் மாநாட்டை அடுத்த இரு வாரங்களுக்குள் நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம்(Anura Kumara Dissanayaka) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்(Rauff Hakeem) கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
“ இலங்கையில் பேரிடர் ஏற்பட்டுள்ளதால் சர்வதேசத்தின் பார்வை திரும்பியுள்ளது. எனவே, சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியா, சீனா, ரஷ்யா உட்பட உலக நாடுகளின் தலைவர்களை இதற்கு அழைக்கலாம். அவர்கள் நிச்சயம் ஒத்துழைப்பு வழங்குவார்கள்.
ஜனாதிபதி அழைப்பு விடுத்தால் ஜப்பான்(Japan), ஐக்கிய அரபு அமீகரம்(United Arab Emirates) உள்ளிட்ட நாடுகள் கூட இதற்குரிய ஏற்பாடுகளை செய்வதற்கு உதவி வழங்கக்கூடும்.
இந்த நெருக்கடி நிலைமையை அரசாங்கத்தால் தனித்து எதிர்கொள்ள முடியாது. எனவே, முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் அழைப்பு விடுக்க வேண்டும்” என்று ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.




