மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் செயற்கை நுண்ணறிவு
மார்பகப் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியும் புதிய முயற்சியாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது பயன்படுத்தப்படுகிறது.
இந்த நவீன தொழில்நுட்பம், அறிகுறிகள் தென்படும் முன்னரே புற்றுநோயைக் கண்டுபிடிக்க உதவுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மார்பகத்தில் புற்றுநோய் உருவாக்கும் ஆரம்ப கட்ட கட்டிகள், பரிசோதனையில் வெள்ளைப் புள்ளிகளாக மட்டுமே தோன்றுவதால், அவற்றைக் கண்ணோட்டத்தில் கண்டறிவது கடினமாகும்.
ஆனால் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பரிசோதனைகள், இக்கட்டிகளை துல்லியமாகக் கணிப்பதுடன், சிகிச்சையை விரைவாகத் தொடங்கவும் வழிவகுக்கும்.
இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சுமார் 95 சதவீத துல்லியத்துடன் செயல்படுகிறது. இதன் மூலம் புற்றுநோயின் பரவலைக் குறைத்து, உயிர் காக்கும் வாய்ப்புகளை அதிகரிக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தற்போது, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் மார்பகப் புற்றுநோயாளிகள் 10 பேரில் ஒருவருக்கு மட்டுமே நான்காம் கட்டத்தில் நோய் கண்டறியப்படுகிறது.
இது சிகிச்சை பலனளிக்க முடியாத கட்டமாகவும் இருக்கக்கூடும். எனவே, ஆரம்ப கட்டத்திலேயே நோயைக் கண்டறியும் செயற்கை நுண்ணறிவு, மருத்துவத் துறையில் மிக முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.





