தென் கொரியாவில் வெளிநாட்டினரின் பாஸ்போர்ட்களைப் பயன்படுத்தி மிகப்பெரிய சிம் மோசடி

வெளிநாட்டவர்களின் கடப்பிதழ் நகல்களைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட 11,000க்கும் மேற்பட்ட போலி சிம் அட்டை மோசடி தொடர்பாக மொத்தம் 71 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
அதில் சில சிம் அட்டைகள் மோசடி மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் 96 பில்லியன் வொன் இழப்பு ஏற்பட்டது என்று திங்கட்கிழமை (செப்டம்பர் 8) காவல்துறை கூறியது.
குற்றச்செயலில் ஈடுபட்ட சந்தேகிக்கப்படும் 71 பேரில், மத்திய சோலில் பல தொலைபேசி கடைகளை வைத்துள்ள உரிமையாளர் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிம் அட்டைகளைப் போலி அடையாளங்களைக் கொண்டு பதிவு செய்து நாடு முழுவதும் உள்ள குற்றவியல் அமைப்புகளுக்கு விற்றதாக அக்குழு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மோசடி, போதைப் பொருள் கடத்தல், சட்டவிரோதக் கடன் வழங்குதல் போன்றவற்றில் ஈடுபடும் அநாமதேய தொலைபேசிகளை இயக்குவதற்கு அந்த சிம் அட்டைகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த மோசடித்திட்டத்தின் பின்னணியில் தொலைபேசி கடை உரிமையாளர் செயல்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. ‘எம்விஎன்ஓஎஸ்’ சிம் அட்டைகளை வாங்கும் வெளிநாட்டினருக்கான அடையாளச் சோதனைகளில் உள்ள சிறு குளறுபடியைப் பயன்படுத்தி, தரகர்கள், தொலைத் தொடர்புத்துறை ஊழியர்களுடன் கூட்டுச்சேர்ந்து அவர் செயல்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எம்விஎன்ஓஎஸ் என்பது பெரிய நிறுவனங்களிலிருந்து தொலைத்தொடர்பு கட்டமைப்பை குத்தகைக்குப் பெறும் சிறிய தொலைத் தொடர்பு நிறுவனங்களாகும்.
இந்தக் குழு பிப்ரவரி 2023 முதல் மே 2025 வரை டெலிகிராம் செயலி வழியாக வெளிநாட்டு கடப்பிதழ் நகல்களைப் பெற்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவை சிம் அட்டைகளை செயல்படுத்தப் பயன்படுத்தப்பட்டன.
கடப்பிதழ் உரிமையாளர்களில் பெரும்பாலானோர் தென்கிழக்கு ஆசிய நாட்டவர்கள் என்றும், அவர்கள் பெயர்களில் சிம் அட்டைகள் செயல்படுத்தப்பட்டிருப்பது அவர்களுக்குத் தெரியாது என்றும் கூறப்படுகிறது.