போராட்டங்களில் 19 பேர் கொல்லப்பட்டதை அடுத்து சமூக ஊடகத் தடையை நீக்கிய நேபாளம்

நேப்பாள அரசாங்கம் அந்நாட்டில் சமூக ஊடகங்கள்மீது விதித்திருந்த தடையை நீக்கியுள்ளது.
சமூக ஊடகங்கள்மீது விதித்திருந்த தடையை எதிர்த்து நேப்பாளத்தில் திங்கட்கிழமை (செப்டம்பர் 8) பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. அதில் 19 பேர் உயிரிழந்தனர்.
அதையடுத்து தடையை ரத்து செய்வதாக நேப்பாளத்தின் தகவல் தொடர்பு அமைச்சர் பிருதிவி சுபா கூருங் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) அறிக்கை வெளியிட்டார்.
தற்போது நேப்பாளத்தில் சமூக ஊடகங்கள் எப்போதும் போல் செயல்படுவதாக அவர் கூறினார்.
கடந்த வாரம் (செப்டம்பர் 5) இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக், எக்ஸ், வாட்ஸ்அப் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சமூக ஊடகங்களை நேப்பாளம் முடக்கியது.
அதையடுத்து திங்கட்கிழமை (செப்டம்பர் 8) நேப்பாளத்தில் உள்ள இளைய தலைமுறையினர் நாட்டில் அதிக அளவில் ஊழல் நடப்பதாகவும் சமூக ஊடகங்களைத் தடை செய்ததற்காகவும் போராட்டத்தில் இறங்கினர்.
பத்தாயிரத்திற்கும் அதிகமான இளையர்கள் காத்மாண்டு, பொக்ஹாரா, புட்வால், தாரன் உள்ளிட்ட இடங்களில் பேரணி நடத்தினர்.அதில் 100க்கும் அதிகமானவர்களுக்குக் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.