மோதல் நிறுத்தம் மீறப்பட்டால் பதிலடி கொடுக்கப்படும் – இந்தியா, பாகிஸ்தான் அறிவிப்பு

எத்தகைய சண்டை நிறுத்தம் மீறலுக்கும் உரிய பதிலடி கொடுக்கப்படும் என இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றையொன்று எச்சரித்துள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையே அமெரிக்கா சமரசம் செய்துவைத்த சண்டை நிறுத்தம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
4 நாட்களாக இந்தியாவும் பாகிஸ்தானும் கடுமையாக மோதின. இரு தரப்பிலும் ஆளில்லா வானூர்திகளும் ஏவுகணைகளும் பாய்ச்சப்பட்டன.
இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடிச் சண்டை நிறுத்தத்துக்கு இணங்கியதாக டிரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார்.
இருப்பினும் சண்டை நிறுத்தத்தை மீறியதாக இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டுகின்றன. சண்டை நிறுத்தத்தை மீறியதாகச் சொல்லப்படுவதை மறுத்த பாகிஸ்தான், அமைதியைக் காப்பதில் உறுதியாய் உள்ளதாகச் சொன்னது.
சண்டை நிறுத்தத்தைக் கோரியது எந்தத் தரப்பு என்பதிலும் முரண்பாடு நீடிக்கிறது.
பாகிஸ்தானே சண்டையை முடிவுக்குக் கொண்டுவரக் கோரியதாகச் சொல்கிறது இந்தியா. ஆனால், அமைதிப் பேச்சுக்கான இந்தியாவின் கோரிக்கைக்குப் பதிலளித்தாகச் சொல்கிறது பாகிஸ்தான்.