பவுச்சர் அதிரடி நீக்கம் – மீண்டும் மும்பை அணி பயிற்சியாளராக வந்த ஜெயவர்தனே
மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் மஹேலா ஜெயவர்தனே நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மும்பை அணி உரிமையாளர் ஆகாஷ் அம்பானி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதனால் மும்பை அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மார்க் பவுச்சர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
2017 முதல் 2022 வரை மும்பை அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தவர் மஹேலா ஜெயவர்தனே.
அந்த காலக் கட்டத்தில் மும்பை அணிக்காக மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தனது கிளைகளை வெவ்வேறு லீக் தொடர்களுக்கும் பரப்பியது.
மேஜர் லீக் கிரிக்கெட், எஸ்ஏ20 லீக் தொடர், ஐஎல்டி20 தொடர் மற்றும் மகளிர் பிரீமியர் லீக் என்று மும்பை அணி நிர்வாகம் முதலீடுகளை அதிகரித்தது.
இதனால் மஹேலா ஜெயவர்தனேவை மும்பை அணி நிர்வாகம், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தின் உலகளாவிய தலைமைப் பொறுப்புக்கு கொண்டு வந்தது.
பயிற்சியாளர்களை நிர்வகிப்பது, அவர்களுடனான ஒப்பந்தம், திட்டம் என்று பல்வேறு சிக்கல்களை ஜெயவர்தனே கவனித்து வந்தார்.
இதன் காரணமாக 2023 மற்றும் 2024 ஆகிய 2 ஐபிஎல் சீசன்களிலும் மும்பை அணியின் பயிற்சியாளராக மார்க் பவுச்சர் செயல்பட்டார்.
2023 ஐபிஎல் தொடரில் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறினாலும், கடந்த சீசனில் கடைசி இடத்தில் நிறைவு செய்தது.
அதேபோல் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா கொண்டு வரப்பட்ட பின், ஓய்வறையை பவுச்சரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
மும்பை அணி வீரர்களுக்கு இடையில் சுமூகமான உறவு இல்லை என்று பலராலும் கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவருடனும் நல்ல உறவில் இருந்து வரும் ஜெயவர்தனேவை மும்பை அணி நிர்வாகம் மீண்டும் பயிற்சியாளர் பொறுப்புக்கு கொண்டு வந்துள்ளது.
இதன் காரணமாக மார்க் பவுச்சர் அதிரடியாக பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் நிர்வாக பொறுப்புக்கு மார்க் பவுச்சர் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 சீசன்களாக மும்பை அணி நிர்வாகம் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாமல் திணறி வரும் சூழலில், ஜெயவர்தனேவின் வரவு அந்த அணிக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் மும்பை அணி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.