இதயம் முதல் சிறுநீரகம் வரை பாதிக்கும் உப்பு
உணவிற்கு சுவையைக் கூட்ட உப்பு அவசியம் என்றாலும், அது அளவோடு இருக்க வேண்டும். அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அது உப்பிற்கும் பொருந்தும். மித மிஞ்சிய உப்பு உடலுக்கு விஷமாகும் என்று மருத்துவ வல்லுனர்களும் எச்சரிக்கின்றனர்.
நாளொன்றுக்கு எடுத்துக் கொள்ளும் உப்பின் அளவு: ஒரு நபர் ஒரு நாளைக்கு 5 கிராம் உப்பு மட்டுமே எடுத்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறது உலக சுகாதார அமைப்பு. அதாவது, ஆரோக்கியமான வாழ்விற்கு, ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூன் உப்பிற்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
எலும்பு ஆரோக்கியம்: உப்பில் அதிக அளவிலான சோடியம் இருப்பதால், எலும்புகளில் சேரும் கால்சியத்தை உறிஞ்சி, அதனை வலுவிழக்கச் செய்துவிடும். இதனால் எலும்பு அடர்த்தி குறையும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆஸ்டியோபொரோஸிஸ் என்னும் எலும்பு மெலிதல் நோய் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும். மூட்டு வலி, கழுத்து வலி இருப்பவர்கள் உப்பை நிச்சயம் குறைத்துக் கொள்ள வேண்டும்.
இதய ஆரோக்கியம்: அதிக அளவிலான உப்பு உணவில் சேர்த்துக் கொள்வதால், அதில் இருக்கும் சோடியம் காரணமாக உடலில் நீர் சேர ஆரம்பிக்கிறது. இது ரத்த நாளங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தி இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இதனால் மாரடைப்பு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
சிறுநீரக ஆரோக்கியம்: அளவிற்கு அதிகமான உப்பு சிறுநீரக நோய்களின் ஆபத்தை அதிகரிக்கிறது. அளவிற்கு அதிகமாக உப்பு உணவில் சேர்த்தால், அது சிறுநீரகத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி, பாதிப்பை ஏற்படுத்துகிறது. பிரச்சனை தீவிரமாகும் போது சிறுநீரகம் செயலிழக்கும் அபாயத்தை கூட ஏற்படுத்தலாம்.
மன ஆரோக்கியம்: அளவுக்கு அதிகமான உப்பினால் மன ஆரோக்கியமும் பாதிக்கும். இதனால் தூக்கமின்மை பிரச்சனை, கவன சிதறல், நினைவாற்றல் திறன் இழத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் அளவுக்கு அதிகமான உப்பை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் மனப்பதற்றமும் அதிகரிக்கும்.
உப்பு அதிகம் உள்ள உணவுகள்: உணவில் சேர்க்கும் உப்பை விட, ஊறுகாய் சிப்ஸ் போன்ற உணவுகளில் உப்பு அதிகம் இருக்கும். இதனால் அதனை தவிர்ப்பது நல்லது. அதோடு பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரெடி டுஈட் மற்றும் துரித உணவுகளில் உப்பு மற்றும் சோடியம் மிகவும் அதிகம் இருக்கும். நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருக்க இதில் சேர்க்கப்படும் ரசாயனங்களும் பெரும் தீங்கு விளைவிக்கும்.