மதுபான விடுதி கழிவறையில் மீட்கப்பட்ட பிரித்தானிய அரசாங்கத்தின் ரகசிய ஆவணம் !
பிரித்தானிய அரசாங்கத்தின் ரகசிய ஆவணங்கள் சில மதுபான விடுதி ஒன்றின் கழிவறையில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் Wetherspoons நிறுவனத்தின் மதுபான விடுதியின் கழிவறையிலேயே அந்த ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த ஆவணங்களில் HMS Anson என்ற நீர்மூழ்கிக் கப்பல் பற்றிய விவரங்கள் இருந்தன.
பிரித்தானிய கடற்படையின் மிகவும் மேம்பட்ட கப்பல்களில் ஒன்று இந்த HMS Anson என கூறப்படுகிறது. இந்த நிலையில், “அதிகாரப்பூர்வ பார்வைக்கு மட்டும்” எனக் குறிக்கப்பட்ட அந்த ஆவணங்கள் கழிவறையில் கண்டெடுக்கப்பட்டது தொடர்பில் விசாரித்து வருவதாக ராயல் நேவி தெரிவித்துள்ளது.
மேலும், அந்த ஆவணங்களில் ரகசிய தரவுகள் எதுவும் இல்லை எனவும் கடற்படை விளக்கமளித்துள்ளது. இருப்பினும், அனைத்து பாதுகாப்பு விடயங்களையும் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம் எனவும் ஆவணங்கள் கழிவறையில் கண்டுபிடிக்கப்பட்டதன் சூழ்நிலை தொடர்பில் ஆராய்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
HMS Anson அணுசக்தியால் இயங்கும் ஒரு தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல். இந்த கப்பலின் கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்ட பகுதியிலேயே தொடர்புடைய மதுபான விடுதியும் அமைந்துள்ளது.
97 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலானது 7,800 டன் எடை கொண்டது எனவும், இந்த கப்பலின் மொத்த மதிப்பு 1.3 பில்லியன் பவுண்டுகள் எனவும் கூறப்படுகிறது. மேலும் அந்த ஆவணங்கள் கண்டெடுக்கப்படும் போது அந்த மதுபான விடுதியானது பொதுமக்களால் நிரம்பி இருந்தது எனவும் தெரிவிக்கின்றனர்.